HEADLINES:
November 16 2018
யாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீண்டும் முறையீடு
11 July 2018

புதுடில்லி: மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் மீண்டும் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் கெஜ்ரிவால் உச்சநீதிமன்ற கதவை தட்டி நியாயம் கேட்டுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக கெஜ்ரிவால் உள்ளார். துணை நிலை கவர்னராக அனில் பைஜால் உள்ளார். டில்லி அரசு நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கடந்த 4-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இதில் அதிகாரம் முதல்வருக்கே என துணை நிலை கவர்னருக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாறுதல் தொடர்பாக துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டில்லி தலைமை செயலாளர்,அனுஷ் பிரகாஷ், மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா, ஆகியோர் கடந்த 9-ம் தேதியன்று ஆலோசனை நடத்தினர். இதில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாறுதல் செய்து துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். 

இதற்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலாளர் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் கடந்த 4-ம் தேதிய உச்சநீதிமன்ற தீர்ப்பை நன்றாக படித்திருப்பீர்கள். யாருக்கு அதிகாரம் என்பது தெரியும் என நினைவூட்டினார்.இருப்பினும் கெஜ்ரிவால் கடிதத்தை துணை நிலை கவர்னர் பைஜால் பொருட்டாக கருதவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கெஜ்ரிவால் நேற்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இவரது மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

 

 

Related Stories