HEADLINES:
November 16 2018
‛பா.ஜ., குறி தப்பும்; கர்நாடகாவில் பெறும் வெற்றியை ராகுலுக்கு பரிசாக்குவோம்': சித்தராமையா
19 December 2017

புதுடில்லி: குஜராத், ஹிமாச்சலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்த பா.ஜ.,வின் அடுத்து கர்நாடகாவை குறி வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் வெற்றி பெற்று அதனை காங்., தலைவர் ராகுலுக்கு பரிசாக்குவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று(டிச.,18) எண்ணப்பட்டன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

2019ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பா.ஜ., அதற்கு முன்னதாக கர்நாடகாவில் ஆட்சியில் அமர வியூகம் வகுத்து வருகிறது.

2018-ம் ஆண்டில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதமும், கர்நாடகாவில் மே மாதமும், ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 2018 டிசம்பரிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

தற்போது மேகாலயாவில் காங்., கட்சியும், நாகாலாந்தில் பா.ஜ.,வும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி புரிகின்றன. இவையனைத்திலும் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சிக்கும். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடமிருந்து காங்., கைபற்றிய, கர்நாடகாவை மீண்டும் கைபற்றுவதே பா.ஜ.,வின் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


ராகுலுக்கு பரிசு!

 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது: குஜராத் தேர்தல் முடிவுகள், கர்நாடகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்நாடக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், எங்களுக்கு கிடைக்க உள்ள வெற்றி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு, முதல் பரிசாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Related Stories