HEADLINES:
November 20 2018
குஜராத்தில் ராகுல் சாதித்தது எப்படி?
19 December 2017

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆறாவது முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும், காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு, குஜராத்தில் அக்கட்சி கூடுதல் இடங்கள் கைப்பற்றியது பா.ஜ.,வுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது.

 

ராகுல் நம்பிக்கை பெற்ற 3 பேர்


குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் மீது ராகுல் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். 

*குஜராத்தில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கி, 40 சதவீதம். இதில் தாகூர் இன மக்களின் பங்களிப்பு சற்று அதிகம். அவர்களில் ஒருவர் தான் அல்பேஷ் தாகூர். இந்த இன மக்கள் வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் சிறு விவசாயிகள் மற்றும் நிலம் இல்லா விவசாய கூலி தொழிலாளிகள்.

* அடுத்து வருபவர் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில், பசு கடத்தல் குற்றச்சாட்டுக்காக, நான்கு தலித் இளைஞர்கள் அடித்து கொல்லப்பட்டனர். அப்போது பா.ஜ.,வுக்கு எதிராக போராட்டத்தை துவக்கியவர் ஜிக்னேஷ் மோவனி. இவர் இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனினும், இவருக்கு காங்கிரஸ் ஆதரவு இருந்தது. இவர் போட்டியிட்ட தொகுதியில் ராகுல் பிரசாரமும் செய்தார்.

* அடுத்து வருபவர் ஹர்திக் பட்டேல். 24 வயதான இவர், பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு, 2015ல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியவர். இவரது ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்தது. இப்படி, தாகூர், தலித் மற்றும் பட்டேல் சமூகத்தினர் ஆதரவை பெற இந்த மூன்று பேரையும் ராகுல் தன்னுடன் இணைத்து கொண்டதை ஜாதி அரசியல் செய்வதாக பா.ஜ., குற்றம் சாட்டினாலும் தேர்தல் முடிவுகள் ராகுல் மேற்கொண்ட முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

 

வணிகர்களின் அதிருப்தி


குஜராத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு காரணம், நகரப்பகுதிகளின் ஓட்டுக்களே காரணம். நகரப்பகுதிகளை சேர்ந்த மக்கள் காலம் காலமாக பா.ஜ.,வை தான் ஆதரித்து வந்துள்ளனர். எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல் ஆகியவற்றால் குஜராத்தின் வணிகர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சூரத் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் இது பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. இதுதவிர, குஜராத்தை சேர்ந்த விவசாயிகளும் பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ளனர். சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்த பருத்தி விவசாயிகள் மற்றும் பிற விவசாயிகள், விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் சிக்கலில் ஆழ்ந்தனர். அதன் காரணமாகவே சவுராஷ்டிரா பகுதியில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை பெற முடிந்தது. இப்படி, பா.ஜ.,வுக்கு எதிராக இருந்த பல்வேறு காரணிகளை ராகுல் ஒன்றிணைத்து செயல்பட்டு, 1985 ம் ஆண்டுக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் காங்கிரசுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுத்து உள்ளார் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் காணப்படும் அதிருப்தி ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

 

 

Related Stories