HEADLINES:
February 20 2018
பா.ஜ., வெற்றி: தலைவர்கள் கருத்து
18 December 2017

புதுடில்லி : குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பா.ஜ., பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவது இறுதி ஆகி விட்டது.
இந்நிலையில் பா.ஜ.,வின் இரு மாநில தேர்தல் வெற்றி குறித்து பல்வேறு கட்சிகளை தேர்தல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் விபரம்,
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் : குஜராத், இமாச்சலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி.
பா.ஜ., சுப்ரமணியசாமி : குஜராத்தில் 105 இடங்களில் பாஜ., வெற்றி பெறும்.
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் : சொந்த மாநிலத்திலேயே பிரதமர் பலத்தை இழந்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை : எதிர்ப்பு கருத்துக்களை முறியடித்து பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பால் பா.ஜ., ஒழிந்து விட்டதாக கூறினார்கள். ஆனால் அதற்கு பின் நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வந்த பிறகு பா.ஜ., ஒழிந்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் இருமடங்காக பா.ஜ., எழுச்சி பெற்றுள்ளது. வடமாநிலங்களை போல் தமிழகத்திலும் பா.ஜ., வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் வாயடைத்து போய் உள்ளன. யார் வந்தாலும் பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க முடியாது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. 2019 லும் அதிகபடியான இடங்கள் தான் கிடைக்கும். ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்.,ன் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
ரவிசங்கர் பிரசாத் : ராகுல் நல்ல போட்டியை ஏற்படுத்தினார். ஆனால் குஜராத் மற்றும் இமாச்சல மக்கள் பா.ஜ.,விற்கே ஓட்டளித்துள்ளனர். 
தேசியவாத காங்., பிரபுல் பட்டேல் : பா.ஜ., மிக வலுவான கள நெட்வொர்க்கை அமைத்துள்ளது. மக்கள் அரசு மீத மிகப் பெரிய கோபத்தில் இருக்கும் போது அதை சரியான முறையில் பயன்படுத்த காங்., தவறும் என நான் நினைக்கவில்லை. 
பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் : தேர்தல் தோல்விக்கு மின்னணு ஓட்டு இயந்திரத்தை காரணம் சொல்லக் கூடாது. 2014 முதல் காங்., ஓட்டு இயந்திரங்களையே குறை கூறி வருகிறது. காங்., மீதான ஊழல் வழக்குகள் பா.ஜ.,விற்கு சாதகமாக அமைந்துவிட்டன. 
காங்., அசோக் ஜிலோட் : தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகட்டும். பிறகு கருத்து கூறுகிறேன்.

 

 

Related Stories