HEADLINES:
August 21 2018
டோக்லாமில் அத்துமீறல்: பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்
17 December 2017

கோல்கட்டா: டோக்லாமில் எந்த அத்துமீறல் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

 

 

மீண்டும் அத்துமீறல்:

சிக்கிம் பூடான் திபெத் நாடுகள் எல்லை பகுதியில் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சீனா சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லைக்கு அனுப்பி வைத்தது. இதனால் தொடர்ந்து பலநாட்களாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.அதனையடுத்து பிரச்னைக்குரிய பகுதியில் இருந்து இரு தரப்பும் தங்களது படைகளை வாபஸ் பெற்றன. இந்நிலையில் மீண்டும் பிரச்னையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதே பகுதியில் 1600 முதல் 1800 ராணுவ வீரர்களை சீனா நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

பதிலடி கொடுக்கப்படும்:

இது தொடர்பாக கிழக்கு மண்டல ராணுவ பொறுப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அபய் கிருஷ்ணா கூறியதாவது: இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. டோக்லாமில் யார் அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும். டோக்லாமில் சீன ராணுவம் குவிக்கப்பட்டது குறித்து வெளியான தகவல் குறித்து நாங்கள் ஏற்கனவே பல தகவல்கள் அளித்துள்ளோம். இது குறித்து புதிதாக கூற ஒன்றும் இல்லை. இந்திய ராணுவம் எப்போதும் உஷாராக தான் இருக்கிறது. யார் அத்துமீறலில் ஈடுபட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு தெரிவிக்க விரும்பவில்லை. நாட்டின் பிராந்தியங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தயாராக உள்ளோம். இரு தரப்பும் போரை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories