HEADLINES:
November 12 2018
தமிழகம் முழுதும் பரவலாக மழை; சென்னை தத்தளிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை
31 October 2017

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். திருவண்ணாமலை, கடலூரில் சுவர் இடிந்து 3 பேர் பலியாகினர்.

 

சாலையில் தேங்கியதண்ணீர்:

 


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை எச்சரித்திருந்தது. சென்னையில் நேற்று (30 ம் தேதி) நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்தது. இதனால், பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக நேற்று இரவு ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான கார்கள் பழுதாகி சாலையில் நின்றன. அதனை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். குரோம்பேட்டை காவல் நிலைய வாசலில் 2 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை சிட்லபாக்கம், கொரட்டூர், வியாசர்பாடி முழங்கால் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை கொரட்டூரில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்தது. புளியந்தோப்பு - வியாசார்பாடி சுரங்கப்பாதை மழை நீரீல் மூழ்கியது. காலை சற்று இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய துவங்கியது. 

 

 

 

நிரம்பும் ஏரிகள்

 


காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஏராளமான இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 912 ஏரிகளில் 66 ஏரிகள் நிரம்பின. மழை தொடர்வதால் இன்னும் பல ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், பெரும்பாலான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. திருவொற்றியூர் பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. 
நாகப்பட்டினம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது.
தஞ்சாவூரில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

மழையளவு

 


கடலூரில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அண்ணாமலை நகரில் 24 செ.மீ., சிதம்பரத்தில் 20 செ.மீ., புவனகிரியில் 15, காட்டுமன்னார்கோயில் மற்றும் கடலூரில் தலா 14 செ.மீ., லாலாப்பேட்டையில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.கரூர், கும்பகோணம், வந்தவாசி பகுதிகளிலும் இரவு முழுதும் மழை பெய்தது. 



மழை தொடரும்




இதனிடையே, வரும் நவம்பர் 4ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

நீர் இருப்பு:

 


கனமழை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்மரம்பாக்கம் ஏரிக்கு 1,719 கன அடியும், புழல் ஏரிக்கு 1.643 கன அடியும் தண்ணீர் வரத்து உள்ளது. தற்போது,
புழல் ஏரியில் நீர் இருப்பு 487 மில்லியன் கன அடி
சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 120 மி.கன அடி
செம்பரம்பாக்கம் 452 மி.கன அடி
பூண்டி ஏரியில் 312 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

 

அவசர கால எண்கள்:

 


மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் மழை தொடர்பாக 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 எண்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் மழை பாதிப்பு குறித்து 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

 

பள்ளிகளுக்கு விடுமுறை:

 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories